Sunday, August 23, 2009

காளிதாஸ் (1931)

1920களில் ஆரம்பங்களில் நடராஜ் முதலியாரும், 20 மற்றும் 30களில் ரகுபதி பிரகாஷும் தமிழ் திரயுலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். ராஜா சாண்டோவும் இந்த கால்கட்டத்தில் தான் வளர்ந்து வந்தார் (அவரைப் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்). ஆனால் 30தின் ஆரம்பம் வரை படங்கள் தான் பேசியதே தவிர பேசும் படம் (டாக்கீஸ்) முதன் முதலில் தோன்றியது 30களின் ஆரம்பங்களில் தான். பேசாத படங்கள் – சைலண்ட் மூவிஸ், அதாவது மொழியற்ற படங்கள் வந்தபொழுது அதை எப்படி தமிழ் திரைப்படம் என வகைப்படுத்தினார்கள்? எனது ஊகம், இயக்குனர், தயாரிப்பாளர் வாழ்ந்த பிரதேசம், திரைப்படம் திரையிடப்படும் பிரதேசம் தான் அது எந்த மொழிப்படம் என்பதை நிர்ணயித்தது. (இதுவரை செய்த எனது ஆராய்ச்சிக்கு அது புலப்படவில்லை. ரண்டார் கை, தியோடர் பாஸ்கரன் முதலியோரிடம் கண்டிப்பாக இதற்கு விடையிருக்கவேண்டும்.) அல்லது சைலண்ட் மூவிஸ் காலத்தில் “டாக்கீஸ்எனப்படும் நேரட்டர்கள் திரை அருகில் நின்றவாறு காலட்சேபம் செய்வார்கள். அவர்கள் எந்த மொழியில் நேரேட் செய்வார்களோ அதை பொறுத்ததா?

1931 தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல். நடராஜ் முதலியார் ஒரு மைல்கல், வெங்கையா-பிரகாஷ் இரண்டாவது மைல்கல் என்று வைத்துக்கொண்டால் ஹச். எம். ரெட்டி இயக்கி, இம்பீரியல் மூவி டோன்உரிமையாளர் அர்தேஷர் இரானி தயாரித்து அக்டோபர் 31, 1931ல் வெளிவந்த “காளிதாஸ்மூன்றாவது மைல்கல். கினிமா செண்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டது. எதனால் இது ஒரு மைல்கல்? பல காரணங்கள்.

முக்கிய காரணம், இது தமிழில் வந்த முதல் பேசும் படம். சாமான்யன் காளிதாஸ் சரஸ்வதியின் அருளால் புலவர் காளித்தாஸாகிய கதை இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படம் என்ற பேரேயொழிய தெலுங்கும், மற்றும் உருதுவும் (ஹிந்தியும்) கலப்படம் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக தன்னை கவர் செய்துகொள்வதில் ஹச்.எம்.ரெட்டி கவனமாக இருந்ததாகவே தெரிகிறது. இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட். குறைந்தபட்சம் ஒரு ஐம்பது பாட்டுக்கள் இருந்திருக்கவேண்டும். ஒரு பாட்டு மூன்று நிமிடங்கள் என்று வைத்துக்கொண்டால் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ஒரு இன்னிசை மழை இல்லை, கர்நாடக இசை மழைதான். இதில் இடை இடையே ராட்டையை பற்றி தேசபக்தி பாடல்கள் பாடி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்க்கு புளி கரைத்தார்கள். காளிதாசை பற்றி அன்றைய மக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் இதை சினிமாவில் பார்க்க சற்றும் சலைக்கவில்லை. இந்தத் திரைப்படம் பின்னால் வந்த படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.

தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்பிகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸ்ஸிர்க்கு மணம் செய்துவைத்துவிடுகிறார் மந்திரி. வஞ்சிக்கப்பட்ட ராஜகுமாரி சரஸ்வதியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியும் மணம் இரங்கி காளிதாசை புலவராக மாற்றிவிடுகிறார் என்பது கதை.

பி.ஜி. வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்‌ஷ்மி இளவரசியாகவும் தோன்றினார். டி.பி.ராஜலக்‌ஷ்மி பாடல்களும் பாடினார். வில்லன் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் படத்தில் பாடினார்கள். மற்ற நடிகர்கள் தேவாரம் ராஜாம்பாள், சுஷீலா தேவி, ஜெ. சுஷீலா, எம்.எஸ்.சப்தானலக்‌ஷ்மி மற்றும் எல்.வி. பிரசாத். எல். வி. பிரசாத் கோவில் பூசாரியாக நடித்தார். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்‌ஷ்மி தமிழிலும், எல்.வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள். நோ சப்-டைடில்ஸ்.

1926ல் வார்னர் ப்ரதர்ஸ் ஹாலிவுட்டில் விடாபோன் முறையில் ஒலிப்பதிவு செய்தது. காளிதாஸ் திரைப்படத்தில் இம்முறை கையாளப்பட்டது.விடாபோன் முறையில் முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ப்ளே செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்படும். என்ன ஒரு கடுமையான காலகட்டம். இன்றைய திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் மனம் வெறுத்து சாமியாராகிவிடக்கூடிய அளவுக்கு கடுமையான வேலை. காளிதாஸ் படத்தின் நீளம் சுமார் 6000அடி. பம்பாயில் தயாரிக்கப்பட்டது. இதே வருடத்தில் தான் ஆனால் சில நாட்களுக்கு முன்னதாக ஆலம் அரா (ஹிந்தி) மற்றும் பக்த பிரகலாதா (தெலுங்கு) என்ற முதல் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் வெளிவந்தன. எல்.வி. பிரசாத் இவை மூன்றிலும் நடித்திருந்தார். காளிதாஸ் திரைப்படத்திற்கு விளம்பரம் அக்டோபர் 30 1931ல், ஒரு 5 செ.மீ. இரண்டு பத்தியும் அடைத்தது. இன்று மாதிரி மார்கெட்டிங்கிற்காக ஒரு படத்திற்கு பல லட்சங்கள் செலவழித்து படம் ட்ப்பாவிற்குள் முடங்குவதுடன் ஒப்பிட்டு பாருங்கள்!

No comments:

Post a Comment