நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு! தாயுண்டு மனமுண்டு அன்புள்ள தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு!
ஔவையாராக மூன்று முறை நடித்துப் புகழ் பெற்றவர் கே.பி.எஸ். முதலில் ஜெமினியின் ஔவையார் படத்தில் அவர் ஔவையாராக நடித்தார். ஔவையார் பற்றிய சிற்பமோ, ஓவியமோ இல்லாத நிலையில் கே.பி.சுந்தராம்பாளை ஔவையாராகவே மக்கள் மதித்தனர். அப்படி அற்புதமாக நடித்து அந்தப் பாத்திரத்தை வாழ்ந்து காட்டி, ஔவையார் என்பவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ண வைத்தார்!
அடுத்து 1965ம் வருடம் வெளியான ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் ஔவையாராக நடித்தார்; கே.வி.மகாதேவனின் இசை அமைப்பில் பாடினார். புராணப் படங்கள் எடுபடாது என்று அனைவரும் ஏ.பி.நாகராஜனை எச்சரித்தனர். ஆனால் தனது பலத்தை நன்கு உணர்ந்த அவர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், கே.வி.மகாதேவன் என்று பலமான கூட்டணியை அமைத்தார். கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளிகிருஷ்ணா, டி.ஆர்.மகாலிங்கம் என அற்புதமான அபூர்வமான இசைக் கலைஞர்களை கஷ்டப்பட்டு ஓரிழையில் இணைத்தார். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் புகழ் பெற்ற 'ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து' பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசையில் கே.பி.சுந்தராம்பாளைப் பாட வைத்தார். பெரும் வெற்றியையும் பெற்றார்!
பாடல் இதோ:
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு
பிழையில்லையே!
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?
முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தோடும் தண்டு
கொண்டு
இங்குற்றோ ஆண்டியானாய்?
எமது வினைபொடிபடவும் அல்லவோ நீ இப்படி
இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும்
எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!
படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்!
கவியரசர் கண்ணதாசன் இயற்றிய 'பழம் நீ அப்பா' பாடலையும் இங்கே மறக்க முடியாது. இதற்கு தன் பொன்னான உச்சஸ்தாயி குரலால் கே.பி.சுந்தராம்பாள் பாடி அனைவரையும் வியக்க வைத்தார்! கவியரசர் கண்ணதாசனின் பாடல் இதோ:-
பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!
திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!
ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!
இத்தோடு, 'வாசி வாசி என்று' மற்றும் 'ஒன்றானவன்' என்ற பாடல்களையும் கே.பி.சுந்தராம்பாள் பாடினார்.
ஔவையார், திருவிளையாடலைத் தொடர்ந்து கந்தன் கருணையிலும் முன்றாவது முறையாக ஔவையாராக வந்து 'அரியது கேட்கின்ற' மற்றும் 'முருகா முருகா' ஆகிய பாடல்களைப் பாடினார். இந்தப் படம் 1967ல் வெளி வந்தது. எடுத்தவர் ஏ.பி.நாகராஜன். இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன்!
1966ல் வெளிவந்த மஹாகவி காளிதாஸ் படத்திலும் 'சென்று வா மகனே சென்று வா' மற்றும் 'காலத்தால் அழியாத' ஆகிய பாடல்களை கே.பி.எஸ். பாடினார்.
தமிழ்த் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் ஒரு அரிய நிபுணத்துவத்தைக் கொண்டவர். தனது மெட்டுக்குத் தக்கபடி பாடல் எழுத எந்தக் கவிஞரையும் அவர் வேண்டியது இல்லை. மாறாக எழுதிய பாடல் வரிகளுக்கு இசை அமைத்த மேதை அவர். திரைப்படப் பாடல் இசையில் இந்த அபூர்வ நிபுணத்துவம் அவருக்கு இருந்தது வெகுவாகப் பாராட்டப்படிருக்கிறது.
இந்த வகையில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய சிறந்த பாடல்களுக்கு இசை அமைத்த பெருமையும் அவருக்குச் சேர்கிறது.
காலத்தால் அழியாத பாடல்களைத் தமிழ் திரையுலகிற்கு பாடித் தந்த பெருமை நிச்சயம் கே.பி.சுந்தராம்பாளைச் சேரும்! அதற்கு இசை அமைத்த பெருமை கே.வி.மகாதேவனைச் சேரும்!
No comments:
Post a Comment