தமிழ்ச்சூழலில் நிகழ்கலைகளில் சாதனைகள் புரிந்த பல உன்னதப் படைப்பாளிகளைப் பற்றிய முறையான வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடம் இல்லை. பின்வரும் சமூகத்தினருக்கு பெரும் உத்வேகத்தைத் தரக்கூடிய வாய்ப்புகள் பெற்ற அவர்களுடைய படைப்பாற்றல் சரியான பதிவுகள் இன்றி முழுமையாக வந்து சேர்வது இல்லை. இலக்கிய ஆசிரியர்களுடைய படைப்புகள் காலம் கடந்தும் அவர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கான களனாக இருக்கின்றன. ஆனால் இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக்கலைகள் போன்ற நிகழ்கலைகளில் ஈடுபடுபவர்கள் தாம் வாழும் காலத்தில் எத்தகைய உன்னதமான பாதிப்புகளை உருவாக்கினாலும் அவைகளை கொண்டாடக்கூடிய சூழல் சிறுபான்மைப்பட்டதாகவே உள்ளது. நிகழ்கலைகளில் சூழலுடன் இணைந்த நேரடி அனுபவம் உருவாக்கும் மன அதிர்வுகளை பின்வரும் சமூகங்கள் அதே அளவு உணரமுடிவதில்லை. நிகழ்கலை சாதனையாளர்களின் அழகியல் பற்றிய முறையான வரலாறு அவர்கள் வாழும் காலத்திலேயே தொகுக்கப்படுவதுதான் அவர்களுடைய கலைக்கும் வாழ்க்கைச் சூழலுக்குமான ஊடாட்டம் குறித்த சரியான புரிதலுக்கு வழிவகுக்கும். இசைபோன்ற ஒரு கலையில் எந்தக் காலத்திலும் கேட்டுணரக்கூடியதான இசைச்சேகரங்களுக்கான வாய்ப்புகள் இன்று பெருகியிருந்தாலும் அந்தக் கலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிற ஒருகாலகட்டத்தில் அக்கலைஞர்கள் மேற்கொண்ட பயணங்களையும், எதிர்கொண்ட அழகியல் பிரச்னைகளையும் மனப்போராட்டங்களையும் தவிர்த்து அவர்களுடைய கலை குறித்த சரியான பார்வை ஏற்பட சாத்தியம் இல்லை. இன்று பிரகாசமாகத் தெரியும் அவர்களுடைய கலை வாழ்க்கையின் பின்னால் அவர்கள் தாண்டிவந்த ஏற்ற இறக்கங்களைப் பற்றிய ஒரு பரிச்சயம் அவர்கள் இயங்கிய கலை மற்றும் சமூகப் பின்புலம் குறித்த ஒரு புரிதலுக்கு உதவமுடியும். கே.பி. சுந்தராம்பாளுடைய வரலாற்றுத் தொகுப்பை இன்று அவர் இறந்து 23 வருடங்களுக்குப்பிறகு படிக்கும்போது ஒரு பெரும் கலைஞராகப் பரிணமித்த ஒரு படைப்பாளியின் முழுப்பரிமாணங்களும் வெளிச்சத்துக்கு வர இயலாத ஒரு அவலம் மனதைத் தாக்குகிறது.
முக்கியமாக தம்முடைய குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் ஒரு கலைஞராக உயரிய நிலை பெற்ற கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்களையும் மணவாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களையும் அறியும்போது அத்தகைய நிலையிலும் அவர்கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றதை உணர முடிகிறது. ஆனால் அழகியல் ரீதியாக எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும், உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண்கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன.
கே.பி. சுந்தரம்பாளுடைய கலை மற்றும் சமூக வாழ்க்கை குறித்த பல தகவல்களை இந்த தொகுப்பு கொண்டிருந்தாலும் இவை பெரும்பாலும் பத்திரிகைகள் மூலமாக வெளியே தெரியவந்த செய்திகளின் அடிப்படையிலேயே உள்ளன. கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. இதுபோன்ற அவருடைய அக உலகம் மற்றும் கலை குறித்த ஆழமான தேடல்களை புலப்படுத்துகிற மதிப்பீடுகள் மற்றும் அழகியல் சார்ந்த நூலாகவும் இது தொகுக்கப்படவேண்டும். மேலும் தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை ஆகின்றன. இசையில் பிராம்மணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது. சினிமாவில் சாஸ்திரிய சங்கீதம் குறித்த அவரது கட்டுரை கர்நாடக மற்றும் பாரம்பரிய இசையின் பயன்பாடு குறித்த அவருடைய தீவிரமான விழைவுகளைப் புலப்படுத்துகிறது. அவருடைய இசைப்பயணம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்ததான தோற்றம் கொண்டிருந்தாலும் இசை குறித்து இறுக்கமான கட்டுமானங்களும், மதிப்பீடுகளும் கொண்டிருந்த ஒரு சூழலிலேயே அவர் தன்னுடைய தீர்மானமான தேர்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அத்தகைய நிலைப்பாடுகள் பற்றிய அழகியல் மற்றும் சமூகவியல் பரிசீலனையே அவருடைய கலைக்கு உரிய கெளரவம் வழங்க முடியும்.
ஆசிரியர் தமிழிசை இயக்கத்தின்பால் கொண்டுள்ள ஈடுபாடும், அதன் காரணமாக கே.பி.சுந்தராம்பாளின் எழுச்சியில் கொண்டிருந்த ஈர்ப்பும் தொகுப்பு முழுவதும் விரவிக்கிடக்கின்றன. ஆனால் தொகுப்பு இன்னும் கூர்மையாக மேலெடுத்துச் செல்லப்படவேண்டியது அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment