
உதவாக்கரை மாணவர்கள் ஒன்று பட்டு இழந்த பள்ளி கவுரவத்தை மீட்கும் கதை.
நதியா தாளாளராக இருக்கும் பள்ளியில் எட்டு மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து ரவுடித்தனம் செய்கின்றனர். ஒருத்தருக்கொருத்தர் கீரி பாம்பாய் அடித்து கொள்கின்றனர். நதியா அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுப்பதே மாணவர்கள் திருந்தாமைக்கு காரணம் என ஒரு ஆசிரியர் எதிர்க்கிறார்.
மாணவர்கள் கோஷ்டி சண்டை பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டியிலும் எதிரொலிக்க எல்லோர் மத்தியிலும் அவமானப்பட்டு தலைகுனிகிறார் நதியா. போட்டியில் இருந்து விலக முடிவெடுக்கிறார்.
இந்த சம்பவம் மாணவர்களிடம் ஒற்றுமை ஏற்படுத்துகிறது. இறுதி போட்டியில் வெல்ல தீவிர பயிற்சி எடுக்கின்றனர். போட்டியில் வென்றார்களா? என்பது கிளைமாக்ஸ்.
மாணவர்களின் குறும்பு சுட்டித்தனங்களை யதார்த்தமாக செதுக்கி கண்முன் நிறுத்துகிறார். இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா.
மாணவர்களின் சுட்டித்தனங்களை ரசிக்கும் அழகான தாளாளராக மின்னுகிறார் நதியா குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவியரை முட்டிக் கால் போட வைத்து அடித்து துன்புறுத்தும் ஆசிரியர் பாலகிருஷ்ணன் பெற்றோர்களிடம் வெறுப்பு சம்பாதிக்கும் கொடூரம்... அவரை நதியா கண்டிப்பதுடன் டிஸ்மிஸ் செய்வது எதிர்பாராதது.
அவமானப்படுத்திய உயர் அதிகாரி முன் மாணவர்கள் போட்டியில் வென்றதும் என் மாணவர்கள் மாடுகள் இல்லை அவிழ்த்து விட்ட குதிரைகள் என்று பதிலடி கொடுப்பது பளீர்...
அருண்-கிருபாகாதல் பாலியல் ஈர்ப்பு. அருணின் கொலைகார தந்தை, இர்பானின் மோசமான தாய் பிறந்த மூன்று மணி நேரத்தில் காப்பக வாசலில் வீசப்பட்ட கிருபா என கதாபாத்திரங்களின் பின்புல கதை வலுசேர்க்கிறது.
இர்பானும்-கிருபாவும் அண்ணன் தங்கை போல் பழகுவதை தவறாக புரிந்து அருண் எடுக்கும் விபரீத முடிவால் ராட்சத மணி அவிழ்ந்து விழுவது அதிர்ச்சி. இறந்து போகும் நண்பன் பாலாஜி நினைவோடு பைத்தியமாகும் அருண் பரிதாப பட வைக்கிறார்.
சத்யா, விகாஷ், சுரேஷ், ஹார்வி, விக்னேஷ், குரு, பாத்திரங்களும் கச்சிதம். தாய் இன்னொருத்தருடன் ஓடியதை அறிந்து தற்கொலைக்கு துணியும் இர்பான் நதியாவால் காப்பாற்றப்பட்ட பின் மீண்டும் குறும்புத்தனங்களில் ஈடுபடுவது கேரக்டர் சிதைவு... ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் இனிமை. நெல்லை பாரதியின் இஸ்பகராரா... பாடல் இளசுகளின் தேசிய கீதம், கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு பலம்.
No comments:
Post a Comment