Friday, August 21, 2009

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்
 


தோல்வி அடைந்த காதல் ஜோடி கதை... 
 
கடலோர கிராமமான முட்டத்தில் வசிப்பவன் குசேலன். அதே ஊரில் பாட்டியுடன் தங்குகிறார். அம்மா, அப்பா இல்லாத ஏழை பெண் துளசி. இருவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். நட்பாக பழகும் அவர்கள் பிறகு காதல் வயப்படுகின்றனர். 
 
ஒரு கட்டத்தில் குசேலன் தாய்க்கு காதல் விஷயம் தெரிய ஆவேசமாகிறார். மகன் வெளியூர் சென்ற சமயத்தில் துளசியை தெருவில் முட்டு போட்டு அடித்து கூந்தலை வெட்டி ஊரை விட்டே விரட்டுகிறார். 
 
காதலி பிரிவால் நொறுங்கும் குசேலன் குடிக்கு அடிமையாகிறான். 
 
வெளியூர் போன துளசி இன்னொருவனுக்கு மனைவியாகிறாள். கணவனாக வாய்த்தவனோ திருட்டு, கொலை, ஜெயில் என திரிபவன். ஒரு கட்டத்தில் கணவன் ஜெயிலுக்கு போக மீண்டும் முட்டம் வருகிறாள். அங்கு குசேலன், துளசியின் சந்திப்பால் நடக்கும் உணர்வு பூர்வமான நிகழ்வுகள் கிளைமாக்ஸ்... 
 
நெஞ்சுருக வைக்கும் அழுத்தமான காதல் கதையை விறு விறுப்பாக படமாகியுள்ளார் இயக்குனர் ராஜமோகன். கடலோர கிராமம், சாயம் பூசாத முகங்கள் உணர்ச்சிமயமான கதை என அனைத்திலும் யதார்த்த பிரதிபலிப்பு. 
 
குசேலனாக வரும் ராமகிருஷ்ணன் பாத்திரத்தில் ஒன்றுகிறார். துளசி மேல் காதல் வயப்படுவது காதலியை விரட்டியதாய் மேல் ஆவேசமாகி பையை தூக்கி வீசி தலையில் அடித்தபடி ஓடி விபத்தாகையில் பதற வைக்கிறார். 
 
திருமணத்துக்கு பிறகு ஊருக்கு வரும் காதலியை பார்த்து நான் வருவேன்னு முடிவு பண்ண ஒரு காரணம் கிடைக்கலியா என்று புலம்பும்போது மனதை தொடுகிறார். 
 
துளசியாக வரும் தனன்யா ஆதரவற்று, காதலனை இழந்து வில்லனுக்கு வாக்கப்பட்டு வாழ்வை முடிக்கும் பாத்திரத்தில் பரிதாப பட வைக்கிறார். 
 
கணவன் செய்த கொலை பழியை காதலன் சுமந்ததும்... தண்டனையை அவன் ஏற்றால் எனக்குள் இறங்கி விடுவான் என ஆவேசப்படுவது அழுத்தம். 
 
தனன்யா கணவனாக வரும் தருண் சத்ரியா அவர் அக்காவாக வரும் ஈஸ்வரி, பாட்டியாக வரும் நாகம்மா, ராமகிருஷ்ணன் தாயாக வரும் சந்திரா ஆகியோர் பார்த்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. 
 
கிராமத்து யதார்த்த வில்லனாக பளிச்சிடுகிறார் நாகேந்திரன். யுவன்சங்கர்ராஜா இசையும், சித்தார்த் ஒளிப்பதிவும் கைகோர்த்து அழகூட்டியுள்ளன. ராஜமோகன் வசனமும் பளிச்சிடுகிறது. 
 
ஜாலியாக போன கதையை பிற்பகுதியில் ஒரேயடியாக சோகத்தில் மூழ்க வைப்பது சிறப்பாய் இல்லை. 
 
கவித்துவ காதல் கதை.

No comments:

Post a Comment