Wednesday, August 26, 2009

லட்ச ரூபாய் நடிகை

மதிப்பிற்குரிய ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, பிரணாம்.சமீபத்தில் நான் சென்னை வந்திருந்த சமயம் தங்கள் 'ஒளவையார்' படத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையில் அது எனக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். சங்கீதத்தின் பால் உங்களுக்குள்ள பிரேமைக்கும், கடவுளிடம் பக்திக்கும் 'ஒளவையார்' ஒரு பூர்ணமான அத்தாட்சி. முக்கியமாக ஸ்ரீமதி சுந்தராம்பாளின் அரிய செயல்களைக் கண்டு வரும் போதே என் கண்களில் பலமுறை நீர் நிரம்பி விட்டது.அவர் ஏற்று நடித்த பாகத்தையும் பார்த்து, அவருடைய சங்கீதத்தையும் கேட்டபிறகு வெட்ட வெளிச்சமாக எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது. உண்மைக் கலைஞர்களின் கீதத்திலேயுள்ள இனிமையும் சுவையும் அவர்களுடைய இதயத்தின் மேன்மையிலும் நாதோபாஸனையிலும் கலையிலும் கொண்டுள்ள பக்தியிலும் மட்டுமே காணக் கிடைக்கின்றன. நானே விநாகராயிருந்தால் இம்மாதிரி உணர்ச்சியுடன் பாடும் ஒரு தொண்டரை - தொண்டராயிருக்கும் தொண்டன் என்ற முறையில் அவரைத் தொழுது கொண்டே இருப்பேன். இதற்கு மேல் அவர் மீது எனக்குள்ள மதிப்பை வெளியிட வார்த்தைகள் அகப்படவில்லை. பொது ஜனங்களுக்கு இணையற்ற படம் ஒன்றை அளித்ததற்கு உங்களை நான் பாராட்டுகிறேன். படங்களில் கர்நாடக சங்கீதம் சோபிக்காது என்று சொல்கிறவர்களுக்கு 'ஒளவையார்' படம் ஆணித்தரமாக பதில் கொடுக்கும். ஒளவையார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் வாசனுக்கு மேற்கண்ட கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா? இந்தித் திரையுலகில் நீண்ட வருடங்களாக கானக் குயிலாய் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர். ஞானப் பழத்தைப் பிழிந்து..... என்று வெண்கல மணியின் நாதம் போன்ற கணீரென்ற குரலுடன் ஐந்தரைக் கட்டையில் ஒலிக்கும் பாடலைக் கேட்டால் இன்றைய தலைமுறையினருக்கு ஒருவேளை சிரிப்பு பொங்கிக் கொண்டு வரலாம். ஆனால் முறையான சங்கீத பயிற்சி இல்லாமல் கேள்வி ஞானத்தில் ஆறு வயதிலேயே பாடி சபையோரை அசத்திய கே.பி.எஸ் என்கிற கே.பி. சுந்தராம்பாளை தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு பல சங்கீத வித்வான்களும் தங்களின் ஆதர்ச பாடகராகவே கருதினர். 1908-ல் பிறந்த கே.பி.எஸ்.-ன் வாழ்க்கை மிகுந்த வறுமையோடுதான் துவங்கியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாளுக்கு படிப்பு வரவில்லையே தவிர, பாட்டு நன்றாக வந்தது. வறுமையின் உச்சத்தில் அவரது தாய் தன்னுடைய பிள்ளைகளுடன் சாவதற்கு ஆற்றுக்கு கிளம்பியிருக்கிறார். பிறகு மூத்த பெண் அம்மாவை திரும்ப அழைத்து வந்திருக்கிறார். கரூரில் இருந்த நாடகக்குழுவில் 'நல்ல தங்காள்' நாடகத்துடன் சுந்தராம்பாளின் கலை வாழ்க்கை துவங்கியது ஒரு கறுப்பு நகைச்சுவை. தன்னுடைய கணீரென்ற குரல் வளத்தால் சபையோரை உடனே கவர்ந்த சுந்தராம்பாளின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. தன்னுடைய காதல் கணவரான எஸ்.ஜி.கிட்டப்பாவை சுந்தராம்பாள் முதலில் சந்தித்தது இலங்கையிலுள்ள கொழும்புவில். அப்போது கிட்டப்பாவின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. 'கந்தர்வ கான கிட்டப்பா'. தன்னுடைய கணவரை முதன் முதலில் சந்தித்து பற்றி இப்படி குறிப்பிடுகிறார் கே.பி.எஸ்.
"நான் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன். ராஜா மாதிரி ஒருத்தர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று என் தாய் என்னிடம் வந்து சொன்னார். நான் எழுந்திருந்து முகத்தை சுத்தம் செய்து கொள்ளு முன்னமேயே எங்க ஆத்துக்காரர் என் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டார். நான் பிரமித்துப் போனேன். கூச்சம் சிறிதும் இல்லாமல் என் கட்டிலில் வந்து உட்காரவாவது என்று எண்ணினேன். ஆனால் அவர் பேசத் துவங்கி விட்டார். என்ன கம்பீரமான தோற்றம்! என்ன ஸ்பஷ்டமான வாக்கு! எனது கந்தர்வன் வந்துவிட்டார் என்றே தோன்றியது."()சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இணைந்து நடித்த நாடகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. கிட்டப்பாவிற்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தாலும் சுந்தராம்பாளையும் இருவீட்டாரின் முரணோடு திருமணம் செய்து கொண்டார். இருவரும் துவக்கத்தில் காதல் பெருகி வழிந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்றாலும் கிட்டப்பா முரட்டுப் பிடிவாதக்காரராக இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் அவர்களிடையே நெருக்கமான வாழ்க்கை வாய்க்கவில்லை. கே.பி.எஸ். கிட்டப்பாவிற்கு எழுதிய சில கடிதங்களில் உருக்கமும் பிரியமும் கலந்து காணப்படுகிறது. 1933-ம் ஆண்டு தனது 28-வது வயதிலேயே கிட்டப்பா நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். தனது 25-ம் வயதிலேயே விதவையான கேபிஎஸ், 'பிற ஆடவரோடு இணைந்து நடிப்பதில்லை' என்ற முடிவோடு பொதுவாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார். பின்னர் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் காங்கிரஸின் பிரச்சாரத்திற்காக தம்முடைய கலைத் திறமையை பயன்படுத்த ஆரம்பித்தார். தமிழ்ச்சினிமா பேச ஆரம்பித்த பிறகு அதுவரை தெருவிலும் அரங்குகளிலும் நடைபெற்ற நாடகங்கள் திரைவடிவத்திற்கு மாற ஆரம்பித்தன. அசன்தாஸ் என்கிற சினிமா தயாரிப்பாளர் 'நந்தனார்' திரைப்படத்தை கேபிஎஸ்-ஸை வைத்து உருவாக்க விரும்பி அவருடைய மாமாவை அணுகிய போது "அவர் என்ன லட்ச ரூபாய் கொடுப்பீர்களா?" என்று விளையாட்டாக கேட்கப் போக தயாரிப்பாளர் உடனே சம்மதித்தாராம். ஒரு பெண் நடிகைக்கு லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடைய மாமா ஒப்புக் கொண்டு விட்டார் என்பதற்காகவும் பிற ஆடவருடன் சேர்ந்து நடிக்கத் தேவையில்லை என்பதாலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கேபிஎஸ் கூறுகிறார். 'எப்படி ஒரு பெண் ஆண் வேடமிட்டு நடிக்கலாம்' என்று தினமணியில் ஒரு விவாதமே துவங்குகிறது. பார்ப்பனரான சங்கீதபூபதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பார்ப்பனரல்லாத கேபிஎஸ்ஸின் காலில் விழுந்து வண்ங்குவது போன்ற காட்சிக்கு ஆதிக்கச் சாதியிடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது. "அவள் என் முன்னால் தெய்வம் போல நிற்கிறாள். எங்களுக்குள் எந்த வித்யாசமும் கிடையாது" என்று விஸ்வநாதய்யர் கூற அப்படியே படமாக்கப்பட்டிருக்கிறது. மணிமேகலை (1940), ஒளவையார் (1953), பூம்புகார் (1964), திருவிளையாடல் (1965), மகாகவி காளிதாஸ (1966), உயிர்மேல் ஆசை (1967), துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973).. என்று பல வெற்றித்திரைப்படங்களில் கேபிஎஸ் நடித்திருக்கிறார். 1980-ல் கேபிஎஸ்-ஸின் மரணம் நிகழ்ந்தது. ()தமிழிசைக் கலைஞர்களில் முக்கியமானவரான கே.பி.சுந்தராம்பாளைப் பற்றி எந்தவொரு நூலுமே வந்திருக்காத நிலையில் இந்த நூலின் ஆசிரியர் சோழநாடன் மிகுந்த உழைப்புடன் கேபிஎஸ்-ஸைப் பற்றின செய்திகளையும் புகைப்படங்களையும் தேடிச் சேகரித்து தொகுத்தளித்திருக்கிறார். பெரும்பாலும் பத்திரிகையில் வந்திருந்த செய்திகள் அப்படியே தரப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஒரு முழுமையான அனுபவம் கிட்டவில்லை. மாறாக நூலாசிரியர் எல்லா செய்திகளையும் வைத்து தன்னுடைய எழுத்தில் முழு நூலாக படைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கேபிஎஸ், கிட்டப்பா உள்ளிட்ட.. பல பிரபலங்களின் அரிய புகைப்படங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. நூலின் பின்னிணைப்பாக கே.பி.எஸ்-ஸின் கிடைத்தவரையான பாடல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன. கேபிஎஸ்-ஸைப்பற்றியும் அவரின் சிறந்த பாடகத்திறமை பற்றியுமான குறிப்புகள், இசை விமர்சனங்கள், நந்தனார், மணிமேகலை, ஒளவையார் திரைப்படங்களின் கதைச்சுருக்கம், நந்தனார் திரைப்படத்தைப் பற்றி 'கல்கி' எழுதின ஒருதலைப் பட்சமான விமர்சனம்.... என்று பல அரிய செய்திகள் இந்நூலில் நிறைந்துள்ளன. முக்கியமானதொரு தமிழிசைக் கலைஞர் மூத்த திரைப்பட நடிகை / சுதந்திரப் போராட்ட தியாகி.... என்று பல பரிமாணங்களில் செயலாற்றியிருக்கும் ஒரு கலைஞரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு

No comments:

Post a Comment