Friday, August 21, 2009

7 வயது வரை திக்குவாயால் கஷ்டப்பட்டேன்: நடிகர் ஹிருத்திக்ரோஷன் சொல்கிறார்

7 வயது வரை திக்குவாயால் கஷ்டப்பட்டேன்: நடிகர் ஹிருத்திக்ரோஷன் சொல்கிறார்
இந்தி திரை உலகின் “சூப்பர் ஸ்டார்” ஹிருத்திக் ரோஷன். இவர் நடிக்கும் படங்கள் வசூலை வாரி குவித்து வருகின்றன. மற்ற நடிகர்களை விட ஹிருத்திக் ரோஷனுக்குதான் இளம் ரசிகைகள் ஏராளம். தற்போது புகழின் உச்சியில் இருக்கும் ஹிருத்திக் ரோஷனின் இள வயது வாழ்க்கை போராட்ட மயமானது.
 
அவர் சிறு வயதில் பேச முடியாமல் தவித்தார். யாரிடம் பேசினாலும் மிகவும் திக்கி திக்கித்தான் பேசுவார். 7 வயது வரை அவரது நிலை இப்படித்தான் இருந்தது.
 
அந்த கால கட்டத்தில் ஹிருத்திக்கின் பெற்றோர் அவரை சிறப்பு பள்ளியில் சேர்த்து “ஸ்பீச் தெரபி” (பேச்சுப் பயிற்சி) அளித்தனர்.
 
இந்த பயிற்சியால் அவரது திக்குவாய் பிரச்சினை முழுமையாக சரியானது. 7 வயது வரை திக்குவாயால் முடங்கிய ஹிருத்திக் ரோஷனின் வாழ்வில் திருப்பு முனை ஏற்பட்டது. பள்ளியில் நன்றாக படித்தார். கடுமையான உடற்பயிற்சியால் தோற்றத்தை மெருகேற்றினார். நடன அசைவுகளில் புது முத்திரை பதித்தார்.
 
பின்னர் இளவயதில் சினிமாவில் குதித்தார். அவர் நடித்த படங்கள் தற்போது வெற்றி வாகை சூடிவருகின்றன.
 
இது பற்றி ஹிருத்திக் ரோஷன் மனம் திறந்து கூறியதாவது:-
 
எனக்கு 7 வயது வரை திக்குவாய் பிரச்சினை இருந்தது. இதனால் நான் பள்ளி செல்லும்போது மற்ற மாணவர்கள் “நான் திக்கி திக்கி பேசுவது போல்” பேசி காட்டி கேலி செய்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் கூட நான் திக்கி பேசுவதை கண்டு சிரிப்பார்கள்.
 
இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். பல நாள் கதறி அழுதிருக்கிறேன். என்னைப் பார்த்து என் அம்மாவும் அழுவார்.
 
அம்மாவுக்கு நான் என்றால் உயிர். அந்த சிறு வயதில் என் அம்மாதான் எனக்கு உலகம். என் தெய்வமும் அம்மாதான்.
 
மற்றவர்கள் என்னை கேலி செய்து காயப்படுத்தினாலும் எனக்கு ஆறுதலாக, இருந்தது பெற்றோர்தான். என்னை அவர்கள் சிறப்பு பள்ளிக்கு அனுப்பி “ஸ்பீச் தெரபி” கொடுத்தார்கள். இந்த பயிற்சி மூலம் என்னால் நன்றாக பேச முடிந்தது.
 
7 வயது வரை வீட்டில் முடங்கிக் கிடந்த நான் 8 வயது முதல் படிப்பு, விளையாட்டில் ஆர்வம் காட்டினேன். நான் நன்றாக பேசுவதைப் பார்த்து என்னை விட அதிக சந்தோஷப்பட்டது அம்மாதான்.
 
நான் சினிமாவுக்கு நடிக்க வந்தபோது மும்பை திரையுலகை சேர்ந்த பலர் கேலி செய்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிப்பில் தீவிரம் காட்டினேன். நான் நடித்த படங்கள் நான் எதிர் பார்த்ததை விட ஆயிரம் மடங்கு வெற்றியை குவித்தன.
 
இப்போது உலகம் முழுவதும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் திக்குவாய் என்று முடங்கி இருந்தால் என் வாழ்க்கை சீரழிந்து போய் இருக்கும். வாழ்வில் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சி செய்து விடாப்பிடியாக உழைத்ததால் வெற்றி பெற்றேன்.
 
என்னைப் போன்ற திக்கு வாய் உள்ள குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக “ஸ்பீச் தெரபி” பள்ளி தொடங்கி நடத்தி வருகிறேன். சினிமாவில் கிடைத்த புகழை விட இந்த மாதிரியான சேவை செய்வதில் தான் முழு சந்தோஷம், நிம்மதி கிடைக்கிறது.
 
என்னைப்போல் மற்றவர்களும் ஆட்டிசம் போன்ற குறைபாடுள்ள குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
 
இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் கூறினார்.

No comments:

Post a Comment