லூமியெர் சகோதரர்கள் பாரிஸில் முதன் முதலில் சினிமா பற்றி பரை சாற்றியவுடன் சென்னை வாசிகளுக்கும் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. 1897ல் எம். எட்வ்ர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், “பாரு பாரு கினிமாஸ்கோப் பாரு” என்று ஒரு இரண்டு ”கினிமா” திரையிட்டார். சில நிமிஷங்கள் தான் ஓடும் “The arrival of the Train” மற்றும் ”Leaving the factory” என்ற இந்த இரண்டு ”கினிமா”க்களும் ”விக்டோரியா பொது மாளிகை”யில் திரையிடப்பட்டது. இது பெற்ற புகழால் மக்கள் ஆர்வம் பெருக பல இடங்களில் பயாஸ்கோப், கினிமாஸ்கோப் என ஹை-டெக் ஜார்கனுடன் உலா வந்தது. ”பாரு பாரு பயாஸ்கோப், ஒன்றரை பைசா மட்டும் செலுத்தினால் போதும்” என்றவுடன் பரவசப்பட்டார்கள் மக்கள். மின்சாரம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை. மக்னீசியத்தை (Magnesium) வைத்து ப்ரொஜெக்ட் செய்தார்கள்.
1900ஆம் ஆண்டு மக்களுடைய ஆர்வத்தைப் பார்த்து சென்னயில் வாரிக் மேஜர் (Warwick Major) ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதன் பெயர் ”எலக்ட்ரிக் தியேட்டர்”. மௌன்ட் ரோடில் இன்றைய ஜெனரல் போஸ்ட் ஆஃபிஸ் இருக்குமிடம் தான் எலக்ட்ரிக் தியேட்டர் இருந்த இடம். கோஹன் என்பவர் ”லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை மௌண்ட் ரோடில் நிறுவினார். அது பின்னர் தீயில் கருகியதால் எல்ஃபின்ஸ்டோன் தியேட்டர் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
படிப்படியாக இந்த சில மணித்துளி படங்கள் காலம் கதையுடன் கூடிய 4000 அடி நீள படங்கள் காலமாக மாறியது. ஹெரால்ட் லாய்ட், சார்லி சாப்லின், எடிக் போலோ போன்ற நடிகர்கள் நடித்தப் படங்கள் தமிழ் பிரசங்கத்துடன் (அந்த காலத்து சப்-டைடில் போலும்) திரையிடப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் எதாவது தர்க்கம் பண்ண வேண்டுமென்றால், மக்கள் தேர்ந்து எடுக்குமிடம் எது தெரியுமா? இரண்டு மூன்று அனா கொடுத்தால் கிடைப்பது சினிமா தியேட்டர். விசாலமான இடம் இதை விட சீப்பாக வடகைக்கு கிடைக்காது. சாதி பற்றி அடித்துக்கொள்ளலாம். விடுதலை பற்றி பேசிக்கொள்ளலாம். சினிமா தியேட்டர் இப்படி ஒரு அடித்துக் கொள்ளும் இடமாக இருந்ததால் தான் படித்த மக்களால் சினிமா சம்பந்தப்பட்டது எல்லாம் ஒரு கௌரவக் குறைச்சலான காரியாமாகப் பார்க்கப்பட்டது. சினிமா தியேட்டர் என்றால் என்ன என்று ஒருவருக்கும் ஒரு டெஃபனிஷன் கொடுக்க முடியவில்லை. முட்டி மோதி அரசாங்கம் தலையிட்டு ஒரு வழியாக சினிமா தியேட்டர் எப்படி இருக்கவேண்டும், அங்கே என்ன திரையிடப்படவேண்டும் என ஒரு கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டது. சென்ஸார் போர்டின் விதை இந்த நிர்பந்தத்தினாலும், காலகட்டத்திலும் தான் தூவப்பட்டது.
இன்று சென்ஸார் போர்ட் என்றால் ஆபாசங்களை திரையில் தடுக்கும் ஒரு நிறுவனமாகத் தான் பலருக்கு தோன்றும். அந்த காலத்திலெல்லாம் இது ஒரு பிரச்சனையாகவே இல்லை. எப்படி இருக்கும்? நடிப்பத்ற்க்கே ஆள் வராதபோது இதெல்லாம் டைரக்டர், ப்ரொட்யூஸர்களுக்கு தோன்றியிருக்கவே மாட்டாது. அன்றைய பிரச்சனை தியேட்டரில் யாராவது சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்களா, விவாதிக்கிறார்களா அல்லது திரையிடுகிறார்களா என்பது தான் வெள்ளைக் கார சர்க்காரின் கவலை. ”சென்ஸார்ஷிப் மற்றும் படித்த மக்களின் எதிர்ப்பும் சேர்ந்துதான் திரையுலக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது” என்று தியோடர் பாஸ்கரன் கருதுகிறார்.
No comments:
Post a Comment